தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: நீதிமன்றம் கேள்வி

மதுரை: நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு தேர்தலை நடத்துவது குறித்து, எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court

By

Published : Sep 26, 2019, 10:39 PM IST

மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டில் தமிழ்நாடு விவசாயிகள் நீர் பாசன மேலாண்மை அமைப்புச் சட்டம் கொணரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், செயலர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முறையாக செய்து, ரகசிய வாக்குப்பதிவினை பெற்று தேர்தலை நடத்த வேண்டும். இந்த அமைப்பே, நீர் மேலாண்மை, நீர்பங்கீடு, நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அமைப்பு நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், நீர்பங்கீட்டுக் குழு, திட்டக் குழு என மூன்று நிலைகளாக இயங்கும். ஆனால், இந்த அமைப்பு தமிழ்நாட்டில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அதற்கான தேர்தல்களும் நடத்தப்படவில்லை. நீருக்காக பிற மாநிலங்களுடன் தற்போதும் பிரச்னை உள்ளது. இந்த அமைப்பு முறையாக செயல்பட்டால், நீர் மேலாண்மையை சிறப்பாக செய்து பிற மாநிலங்களிடம் தண்ணீருக்காக எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, விவசாயத்திற்கு பெயர் போன மாவட்டங்களில்கூட இந்த அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சியைக் கண்ட பின்னும் தமிழ்நாடு அரசு பாடம் கற்க மறந்துவிட்டது. இந்த அமைப்பு முறையாக செயல்பாட்டிருந்தால், முக்கொம்பு தடுப்பணையிலிருந்து வெளியேறிய நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுத்திருக்கலாம்.

350 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் அனைத்தும் தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டத்தின் கீழான மூன்று குழுக்களின் கீழ் செயல்பட்டிருக்கும். ஆனால் அதன்படி எந்த அமைப்பும் இயங்கவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் விவசாயிகள் நீர் பாசன மேலாண்மை அமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்தி மூன்று குழுக்களையும் அமைக்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடத்துவது குறித்து தற்போதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details