1997ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் இவர்களது விடுதலையை எதிர்த்து, விடுதலை செய்யவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும், எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடியும் வரை மேலவளவுக்குள் நுழையக்கூடாது என உத்தரவிட்டனர்.
அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை காவல்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கவும், அதனை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும். 2 மற்றும் 4ஆம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் நன்னடத்தை அலுவலர் முன்பாக ஆஜராக வேண்டும். வேலூர் எஸ்.பி முன்பாக முதலாவது மற்றும் 3ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஜராக வேண்டும். முன்விடுதலை ஆனவர்கள் பாஸ்போர்ட்டை மதுரை எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல் இது தொடர்பாக எந்தவிதக் கூட்டம், போராட்டம் நடைபெறவும் அனுமதிக்கக் கூடாது. அதனை மதுரை எஸ்.பி உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு