முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆலந்துறை ஆறு அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் பணகுடி சுற்றுவட்டாரத்தில் சுமார் 20 கிராமங்கள், 52 குளங்கள் மூலமாக பாசனவசதி பெறுகின்றன. ஆலந்துறை ஆறு அணைக்கட்டு , கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.
நாகர்கோவில் பொதுப்பணித்துறை இதனை நிர்வகித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி விவசாயிகள் அனைவரும் சேர்ந்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து கால்வாயை தூர்வார அனுமதி கோரினர். வனப்பகுதிக்குள், விவசாயிகளையும் டிராக்டரையும் அனுமதிப்பதாகவும் , மண் அள்ளும் இயந்திரத்தை கொண்டு செல்லக்கூடாது என வன அலுவலர்கள் மறுத்துவிட்டனர். தூர்வாராமல் இருந்தால் எங்கள் பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதியில் , வன உயிரினங்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், மண் அள்ளும் இயந்திரத்தை பயன்படுத்தி தூர்வார அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.