தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறி கட்டப்பட்ட வளைவுகளை நீக்குக -உயர் நீதிமன்றம் அதிரடி...

மதுரை: கொடைக்கானலில் சாலையை மறித்து உரிய அனுமதியின்றி வழிபாட்டு தலங்கள் சார்பில் கட்டப்பட்ட வளைவுகளை ( ஆர்ச்சுகளை ) அகற்ற நகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench

By

Published : Oct 22, 2019, 7:56 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மாரியம்மன் கோயிலின் தலைவர் முரளி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான வளைவு ஒன்று உள்ளது. இது நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ளதாகக் கூறி அதை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சி உள்ளது. எனவே, கோயிலுக்காக கட்டப்பட்ட வளைவை அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'கோயில் சார்பில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட வளைவுகள் ( ஆர்ச்) உரிய அனுமதியின்றி, கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் இதே போல் , நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள உகர்தன் நகர் பகுதியில் உள்ள குழந்தை ஏசு திருத்தலம், மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் கோயில் , மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில், கேசிஎஸ் பகுதியில் உள்ள டவுன் பள்ளிவாசல், காமராஜர் சாலையில் உள்ள பள்ளிவாசல், அன்னை திருத்தலம் ஆகிய வழிபாட்டு தலங்களின் வளைவுகள் ( ஆர்ச்) விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி, அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி வழிபாட்டு தலங்கள் சார்பில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வளைவுகள் ( ஆர்ச்ச்களை) மீது 15 நாட்களுக்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உரிய முடிவெடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இல்லையெனில், கொடைக்கானல் நகராட்சி ஆணையர், வழிபாட்டு தலங்கள் சார்பில் கட்டபட்ட வளைவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சபரிமலை சீசனில் தற்காலிகக் கடை அமைக்கத் தடை!

ABOUT THE AUTHOR

...view details