மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"மதுரை அழகர்கோவில், கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரை மாத உற்சவம் மற்றும் ஆடி பிரம்மோற்சவ திருவிழா புகழ்பெற்றது.
சித்திரை விழாவின்போது கள்ளழகர் மதுரை நகருக்குள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கோயில் வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது.
10 நாள் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு ஆடித் தேரோட்டம். முழு நிலவு நாளில் நடைபெறும் தேரோட்டம், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் தேர்வலம் வந்து நிலைக்கு வரும்.
மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆடி பிரம்மோற்சவ விழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆகவே அழகர்கோவிலில் முழுநிலவு நாளில் ஆடித் தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பூரி ஜெகநாதன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது, மக்களின் நம்பிக்கைக்கு உரிய விதிமுறையை பின்பற்றி அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டது.
அப்போது அரசு இந்து சமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேரோட்டம் நடைபெற்றால் தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பது கேள்விக்குறியாகும், ஆகஸ்ட் 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுவதற்கான நாள். அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, தேரோட்டத்தின்போது பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும்
அதே நேரத்தில், தேரோட்டம் பரிகாரத்திற்காக, உற்சவரை சப்பரத்தில் வைத்து ரத வீதிகளில் வலம்வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நேரலையில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் அரசு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.