Kuravan kurathi dance:மதுரை:தமிழ்நாட்டில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இரணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேலாக குறவர் பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் 'குறவன் - குறத்தி' எனப் பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது. மேலும், இந்த ஆபாச நடன காட்சிகளை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து சமூகத்தின் பெயரை இழிவுபடுத்தி வருகின்றனர்.
குறவன் சமூகத்தினர் கல்வி, அரசு, தனியார் பணிகளில் பணிபுரியும் இந்த காலகட்டத்தில் இந்த சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இச்செயல் நடக்கிறது. குறவன் - குறத்தி பெயரில் நடைபெறும் ஆபாச நடனங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த செயல்கள் தொடர்ந்தால் அந்த சமூக மக்கள் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
இணையதளத்தில் குறவன் - குறத்தி என தேடுதல் செய்யும் போது ஆபாச நடனங்கள் தான் வருகின்றன. எனவே, இணையதளத்தில் குறவன் - குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்கவும், ஆபாச நடனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு காவல் துறையினர் அனுமதியளிக்கக் கூடாது. இதனை தடை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.