மதுரை:தஞ்சாவூரைச் சேர்ந்த சசிகலா ராணி மற்றும் மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு வேறு மனுவைத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், “தஞ்சாவூர் மற்றும் மதுரை அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், தங்களுக்கு அரசு தரப்பில் வழங்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்த விசாரணையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்ககுவதற்காக கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் திருடப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், எங்களது பணி ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, இதனை ரத்து செய்து தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 28 மடிக்கணினிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மடிக்கணினிகள் எங்கு மற்றும் எப்போது, யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முழு தகவல் அளிக்க வேண்டும் என அப்போதைய நீதிபதி உத்தரவிட்டார்” என்று வாதிடப்பட்டது.