தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணிகள் முழு விவரமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு - madurai HC verdict to update on civil works

மதுரை: தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai HC verdict  to update on civil works
madurai HC verdict to update on civil works

By

Published : Feb 1, 2021, 5:46 PM IST

மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆறு, ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம் ஆகும்.

ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளை, அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "குடிமராமத்து பணிகள் தொடர்பான விவரங்களை அலுவலர்கள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பார்க்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், குடிமராமத்துப் பணிகளில் எவை முடிந்துள்ளன? நடைபெறும் பணிகளின் நிலை என்ன? என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்புக்காக பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details