மதுரை: பொய் வழக்கில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான மனு விசாரணையில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை எனவும் இவ்வழக்கு விசாரணையை திருப்பி அனுப்பிய கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து புதிதாக மனு தாக்கல் செய்யவும் அம்மனு மீது விசாரணை மேற்கொள்வது குறித்து உரிய முடிவு எடுக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அரசிடம் முன் அனுமதி தேவை இல்லை என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குளியைச் சேர்ந்த அன்றன் சேவியர் வினிஸ்டர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனுவில், 'நான் பிஇ ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளேன். எனது வீட்டு அருகே கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டு அபினேஷ் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையைப் பார்த்ததால் உடனடியாக கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தேன்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் கொலை குறித்து விசாரணை செய்தனர். பின்னர் இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக என்னை கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, ராதாபுரம் சார்பாளர் வள்ளிநாயகம் ஆகியோர் திட்டமிட்டு இந்த வழக்கில் சேர்த்து கைது செய்தனர். மேலும் மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக என்னை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர்.
எந்த குற்ற செயலிலும் ஈடுபடாத என்னை திட்டமிட்டு காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மற்றும் காவலர்கள் குண்டர் சட்டத்தில் அடைத்து என்னை ஏழு மாதம் சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன்.
பின்னர் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களைப் பார்த்தபோது, இந்த வழக்குகள் அனைத்தும் என் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என தெரியவந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். மனு விசாரணையின் போது என் மீது புகார் கொடுத்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி என் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது.
எனவே, என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் ஏழு மாதம் சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, சப் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், காவலர் இசக்கியப்பன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ராதாபுரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். நடுவர் நீதிமன்றம் காவல் அதிகாரியின் மீது வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறி, மனுவை திருப்பி அனுப்பிவிட்டனர்.
எனவே, என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று (ஜன.13) விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை செய்த நீதிபதி நாகார்ஜுனா, காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கோள்ள அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை என பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பதிவு செய்தார்.
மேலும் நீதிபதி, காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கை மனுதாரர் ராதாபுரம் நடுவர் நீதிமன்றத்தில் புதிய மனுவை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை விசாரணைக்கு எடுப்பது குறித்து உரிய முடிவு எடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:கும்பகோணத்தில் சனாதன பொங்கல் விழாவில் திமுக எம்.எல்.ஏ.. நடப்பது என்ன?