திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"பிறக்கும்போது உடல்நலக் குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு, 520 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
நான் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து எழுத்து தேர்வு எழுதினேன். நூற்றுக்கு 62 மதிப்பெண் பெற்று , ஏழாவது இடத்தில் தேர்வு பெற்றேன். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர் . அதில் என் பெயர் இல்லை. விசாரித்து பார்த்ததில் உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பில், மூன்று வருடம் பணி புரிந்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குனரிடம் சான்றொப்பம் (Attested) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
அதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினர். நான் கோவையில் உள்ள சுகாதாரத் துறை இணை இயக்குனரை சந்தித்து கேட்டபோது அவர் சான்றிதழ் சான்றொப்பம் வழங்கவில்லை. வழங்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.