மதுரை மாவட்டம், சோழவந்தான், பூமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் தவமணி - சித்ரா தம்பதியர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மே 10ஆம் தேதி இவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து நான்கு நாள்களே ஆன நிலையில், அந்தக் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து சோழவந்தான் காவல்துறையினர் கொலையான குழந்தையின் பாட்டி பாண்டியம்மாள், தந்தை தவமணி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் பாண்டியம்மாள் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி பாண்டியம்மாள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நசீமா பானு விசாரித்தார். இதையடுத்து வழக்குரைஞர் கிருஷ்ணவேணி, பாண்டியம்மாள் தற்போது வயது முதிர்வு காரணமாக சிறையில் சிரமப்படுகிறார் என்றும் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்றும் வாதாடினார்.
இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதாரருக்கு பிணை வழங்கினார். மேலும் வழக்கில் மறு உத்தரவு வரும்வரை சோழவந்தான் காவல் நிலையத்தில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார்.
இதையும் படிங்க...'ஒருவரை வைத்து மொத்த காவல்துறையையும் தவறாக எடை போடக் கூடாது' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை