மதுரை:சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் விழாக் குழுவினர் தீண்டாமை செயல்களில் ஈடுபடுவதாகவும் அதை தடுப்பதோடு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் மற்றும் மறுமணம் செய்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து திருவிழாக்களில் வழிபாடு செய்யவிடாமல் தடுக்கப்படுகிறார்களா? என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா புலிவலம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்களது கிராமத்தில் அம்மை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வருடம் தோறும் கோயில் திருவிழாவை மக்கள் அனைவரிடமிருந்தும் வரி வசூல் செய்து பிரம்மாண்டமாக நடத்தப்படும் விழா கமிட்டி அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படும்.
நான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக, 'சாதி மறுப்பு திருமணம்' செய்து கொண்டேன். விழா கமிட்டி குழுவினர் என்னை எனது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், என்னிடம் இருந்து வரி வசூல் செய்ய மறுத்தும், என்னை கோயிலுக்குள் வழிபட விடாமல் ஊர் மக்கள் யாரும் என்னிடம் தொடர்பு வைக்கக்கூடாது எனவும் மிரட்டி வருகின்றனர்.