சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ் குமார் தாக்கல் செய்த பொதுநலமனுவில், “2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் நகரமாக மதுரை வளர்ச்சிப் பெற்று வருகிறது. இந்திய அளவில் 44 ஆவது இடத்தில் வளர்ச்சிப் பெற்ற நகரமாக வளர்ந்து வருகிறது.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழ்நாடு, கர்நாடகா மக்களும் பயன் பெறவுள்ளனர். மிகவும் பழமையான மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது.
மதுரை விமான நிலையம், கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு வரை உள்நாட்டு விமான நிலையமாகச் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட சில வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன. தற்போது 17 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
மதுரையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. மேலும், பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் அந்நாட்டிலிருந்து மதுரைக்கு விமான சேவை இயக்கத் தயாராக உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது.