மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி சிவலிங்கம் (65). இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சிவலிங்கம்-சரோஜா தம்பதியின் இரண்டாவது மகனான சிவக்குமாருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கத்தின் சகோதரி அன்னபேச்சியின் மகள் கலைச்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணமான சில நாள்களிலேயே சிவக்குமாருக்கும் கலைச்செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக கலைச்செல்வி தனது தாய் வீட்டில் வசித்துவருகிறார்.
இருவரையும் மீண்டும் சேர்த்துவைக்க உறவினர்கள் பலமுறை முயன்றும் அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிவக்குமாருக்கு அவரது குடும்பத்தார் கடந்த இருபது நாள்களுக்கு முன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துவைத்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற கலைச்செல்வியின் சகோதரன் விஜயகுமார் தனது நண்பர்களுடன் சிமெண்ட் கடையில் அமர்ந்து இருந்த சிவலிங்கத்திடம் இது குறித்துக் கேட்டுள்ளார், இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.