மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை மருத்துவர் எஸ்.சையது ஜாகிர் உசேன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய மருத்துவர் எஸ்.சையது ஜாகிர் உசேன், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறையில் முதுநிலை உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.
மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான சட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில பொதுச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறேன். அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட அரசு மருத்துவர்களுக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறேன்.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். சுகாதாரத்துறை முன்னாள் செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்.
இந்த நிலையில், எனது துறையில் துணை மருத்துவ மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக, என் மீது கடந்த 8ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படாமல், நேரடியாக விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி விசாகா குழு நடத்திய விசாரணையில் நேரடியாக ஆஜராகி, எனது தரப்பு நியாயங்கள் மற்றும் சந்தேகங்களை எடுத்துரைத்தேன்.
ஏனென்றால், விசாகா குழு வரையறுத்துள்ள பாலியல் குற்றங்கள் தொடர்பான எந்த ஆதாரங்களும் என் மீதான புகாரில் இல்லை. எனவே, புகார் அளித்தவர்களை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். புகார் அளித்தவர்களின் கைப்பேசி அழைப்பு விவரங்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்.
மயக்கவியல் துறையில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விசாகா குழுவில் முன் வைத்தேன். எனது நியாயமான கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.