தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மேம்பால விபத்து - என்ஐடி வல்லுநர் குழு ஆய்வு - madurai district news

மதுரை மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்து குறித்து என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு செய்தது.

madurai-flyover-construction-accident-issue
madurai-flyover-construction-accident-issue

By

Published : Sep 4, 2021, 8:30 PM IST

மதுரை : புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாகக் கட்டப்பட்டு வரும் பறக்கும் மேம்பால கட்டுமான பணியின் போது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து காரணமாக இதுவரை மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜேஎம்சி புரோஜெக்ட் (JMC projects) இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் இயந்திரங்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

என்ஐடி வல்லுநர் குழு ஆய்வு

இந்த விபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு கூறியிருந்தார்.

அதனடிப்படையில் பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், கேரளாவைச் சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து தொழில்நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ், டெல்லியைச் சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் ஆலோக் போமிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான என்ஐடி குழு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் அக்குழுவினர், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமையிட அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

விரைவில் ஆய்வு அறிக்கை

ஆய்வுக்குப் பின்னர் குழு உறுப்பினர், டெல்லி மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் போமிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விபத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தியுள்ளோம். தொழில்நுட்பம், ஒப்பந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளோம். ஒப்பந்த நிறுவனத்தார், திட்டப் பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் விபத்திற்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிப்போம்.

ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விபத்து ஏற்பட்ட போது யார் யார் பணியிலிருந்தார்கள் என்று விசாரித்து அவர்களின் விளக்கங்களும் கேட்கப்படும். விரைவில் ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்வோம்” என்றார்.

இதையும் படிங்க : மதுரையில் காந்தி அரையாடைத் துறந்து 100 ஆண்டுகள் நிறைவு; இதற்கான விழாவில் தேசப்பிதாவின் பேத்தி..!

ABOUT THE AUTHOR

...view details