"பாலோ டிராபிக் ரூல்ஸ்".. பறிமுதல் செய்யப்பட்ட கார்களைக் கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு! மதுரை: மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக சுமார் 77 வாகனங்களை மதுரை மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தது.
இது குறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்; "மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 70 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதற்காக 6 தனிப்படைகள் அமைத்து தமிழகம் முழுவதும் வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. 63 வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்துக் கழகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கaளை அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாகப் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைக் கொண்டு "FOLLOW TRAFFIC RULES" என்ற வாசக வடிவில் நிறுத்தி வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசியால் இளைஞர்கள் இறப்பா? - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்!