மதுரை:பறவைகளையும் அதன் அழகையும் ரசிக்காத மனிதர்கள் இருக்கவே முடியாது. அப்படி அந்த பறவைகளை ரசிக்கும் மக்கள் அன்றாடம் அதைப் பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் பச்சைக் கிளி உள்ளிட்ட வனப்பறவைகளை பிடித்து வந்து கூண்டில் போட்டு வளர்க்கிறார்கள். அந்த கூண்டில் கிளிக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஏறி விளையாடக் குட்டி மரக்கொம்பு, ஊஞ்சல் என அனைத்தும் கொடுத்து மிகச் சொகுசாகவே வளர்க்கிறார்கள்.
ஆனால் தங்கத்தில் பூட்டினாலும் விலங்கு விலங்குதானே என்பதை மனிதக் குலம் இன்றுவரை உணரவில்லை என்பதே உண்மை. அந்த கிளிகளோடு பேசி. பழகி வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே வளர்க்கும் நபர்களுக்குத் தெரியாது அந்த கிளி பறந்து சென்று தன் இனத்தோடு இணக்கமாக சேர்ந்து வாழ ஆசைப்படுகிறது என்று. தற்சார்ப்பு வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்கு, பறவை என அனைத்திற்கும் உரியதுதானே.
அந்த வகையில் இந்த பறவைகளின் தற்சார்பு வாழ்வை உறுதி செய்ய மதுரை மாவட்டத்தில் வீட்டில் கிளி உள்ளிட்ட வனப்பறவைகள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களுக்கு நேரில் வந்த வன ஊழியர்கள், ஒலி பெருக்கி மூலம் கிளியை விட்டில் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகங்களை முழங்கச் செய்தனர். அதனுடன் வீட்டில் கிளி வளர்த்து வந்தவர்களை நேரில் சென்று பார்த்து அந்த கிளிகளைப் பறிமுதல் செய்தனர். ஜூலை 17-ஆம் தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் மீறினால் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.