மதுரை:சிவகங்கை மாவட்டம் அரியக்குடியைச் சேர்ந்த கனி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
இந்த கட்டிடத்தில் இஸ்லாமிய மாணவர்கள் அரபி கற்றுக் கொள்வதற்காக அரபிக் பயிற்சி பள்ளி தொடங்கப்பட உள்ளது. ஆனால், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, கடந்த வாரம் இந்த கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட கட்டிட வரைபட அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கேட்டபோது இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை பள்ளி நடத்த உள்ளதால் முறையான அனுமதி பெற்று வருமாறு கூறி கட்டிட வரைபட அனுமதி ரத்து செய்ததாக தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் சட்டவிரோதம். எனவே, ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவை ரத்து செய்து அரபி பள்ளி பயிற்சி நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.