மதுரை:ராமநாதபுரம்மாவட்டம், பனைவயலையைச் சேர்ந்த கலைராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பனைவயல் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை அத்தாணி கண்மாயே பூர்த்தி செய்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பாக கண்மாய் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த கடை மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே பகுதியில் புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு அருகிலேயே கோயில்கள் முறையே 150 மீட்டர், 40 மீட்டர், 20 மீட்டர் தொலைவுகளில் அமைந்துள்ளன. தற்போதும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலிப் பாட்டில்களும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளும் கண்மாயிலும் அருகில் உள்ள விவசாயப் பகுதிகளிலும் வீசப்படுகின்றன.
ஆகவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டம், பனைவயல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "மனுதாரர் சமர்ப்பித்துள்ள புகைப்படத்தில் கண்மாய்களில் மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மது பாட்டில்களைப் பெறுவது தொடர்பான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதே ராமநாதபுரத்தில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லையா?’’ என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், "நீலகிரி மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 'மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமான திட்டம் தானே, எனவே மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துங்கள்' என அறிவுறுத்தினர். 'தொடர்ந்து, இந்த திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னமும் சோதனை முறை எனக்கூறுவது ஏன்?
எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது? மலைப் பகுதிகளில் மட்டும் அமல்படுத்தினால் போதுமா?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்'' செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு; ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு