'ஆன்லைன் ரம்மி' போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், 'கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணைய தளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுகளால் பல்வேறு இளைஞர்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக அளவு இளைஞர்கள், இதில் மூழ்கி தங்கள் பணங்களை இழந்து வருகின்றனர். இந்த விளையாட்டுகளின் மூலமாக பணத்தை இழந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்டமாகத் திகழும் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.
மேலும், இந்த சூதாட்ட விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நடிகை தமன்னா போன்றோர் நடித்து, விளம்பரம் செய்து இந்த விளையாட்டை ஊக்குவித்து வருகின்றனர். இந்த விளையாட்டுக்குத் தடை விதிப்பது மட்டுமின்றி, இதில் நடித்துள்ள விளம்பரத் தூதுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்றுவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடைசெய்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுக்கு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்ரீ சரண், 'ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அலைபேசி, கணிப்பொறி என எதில் விளையாடினாலும் அதனைக் கண்டறியும் வகையில், சைபர் பிரிவினரால் கண்டுபிடிக்கப்படும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன், அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்' எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடைபோட்ட தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர் நீதிமன்றக் கிளை இதையடுத்து நீதிபதிகள், 'ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தைத் தடுக்கும்விதமாக, இந்த அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியான முடிவு எடுத்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட அவசரச் சட்ட நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்குத் தடை: அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு