மதுரை: மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.
அதில், "தமிழ்நாட்டில் மொத்தம் 39 ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் ஐம்பது விழுக்காடு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கண்மாய்கள் முறையாகச் சர்வே செய்யப்பட்டதில்லை. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டடங்களைக் கட்டியுள்ளது.
அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை
இதன் காரணமாகவே மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்பாஞ்ச் சிட்டி ரெயின் வாட்டர் சிஸ்டம் (sponge city rainwater system) என்னும் பெயரில் மழை நீர் சேமித்தல், அதற்கான வடிகால் திட்டம் அமைத்தல் போன்றவை முறையாக மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக்கோரி அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.