மதுரை: டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்த அவர், நள்ளிரவு என்பதால் விடுதி அறையில் தங்குவதற்குத் திட்டமிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார். இதனிடையே, அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த இளம்பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.
அப்போது அந்த பெண்ணை குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் ஓட்டல் அறையில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். மேலும், அதனை தங்கள் செல்போன்களில் 4 பேரும் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஹோட்டலில் இறக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். காவல்துறையினர் விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது கும்பகோணத்தை சேர்ந்த புருஷோத்தமன் உட்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகள் தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆயுள் (மரணம் அடையும் வரை) தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.