மதுரை:மதுரை மாநகராட்சி 19வது மாமன்ற கூட்டம் நேற்று (ஜூன் 26) காலை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய ஆணையர் பிரவீன்குமார் முதல் முறையாக பங்கேற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதுரை தெற்கு தொகுதியின் மதிமுக எம்எல்ஏவான பூமிநாதன் தமது தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் ராஜினாமா செய்ய வேண்டியது தான் என தமது கட்சி தலைமையிடம் தான் பேசியதாகவும் பூமிநாதன் கூறியுள்ளார்.
மாமன்றக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ பூமிநாதன், மாமன்றக் கூட்டத்தில் தான் பதவி விலகுவதாக பேசவில்லை என்றும், மாநகராட்சி சார்பாக நடைபெறும் பல்வேறு பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை உடனே சரி செய்ய கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கூட்டத்தின் நடுவே எதிர்கட்சி மாமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த சோலைராஜா பேசிக் கொண்டிருக்கையில் மூன்று நிமிடம் முடிந்ததால் அமருங்கள் என திமுக உறுப்பினர் காளிதாஸ் கூறினார். இதற்கு பதிலடியாக பார்வையாளர் மாடத்தில் இருந்த அதிமுக எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர் சோலை ராஜாவின் மகன் இளவரசன், மாமன்ற உறுப்பினர்களை எதிர்த்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனடியாக எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர் சோலைராஜாவின் மகன் இளவரசன் பார்வையாளர் மாடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக மாமன்ற அவையில் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனையடுத்து கூட்டம் நிறைவு பெற்ற பின்பு வெளியில் வந்த மேயர் இந்திராணியிடம் செய்தியாளர்கள், எம்எல்ஏ மற்றும் உறுப்பினர்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பினர்.