தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரோனா தொற்று காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் ரூ. 1000 வழங்க முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களது வாழ்க்கை தினசரி வேலையின்றி கடந்த மூன்று மாதமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ரூ. 1000 போதுமானதாக இருக்காது. எனவே, கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ஐந்தாயிரம் வழங்க உத்தரவிட வேண்டும். கட்டடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால், அவர்கள் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர். மேலும், கட்டட தொழிலாளர்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு புலம்பெயர்ந்து தான் தொழில் செய்து வந்தனர் .
இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் என இரு முறை நிவாரண நிதியாக டெல்லி அரசு வழங்கி உள்ளது. பஞ்சாப் அரசு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதியாக இரு முறை வழங்கி உள்ளது. இவற்றை ஒப்பிடும் போது தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரணத் தொகை மிகவும் குறைவு. எனவே, தமிழ்நாடு கட்டட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 18 லட்சத்து 20 ஆயிரத்து 674 உறுப்பினர்கள் கட்டட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 பேர் பதிவை புதுப்பிக்கவில்லை. கட்டட தொழிலாளர்கள் அனைவருமே வேலையின்றி தவிக்கும் நிலையில் பதிவை புதுப்பிக்காத 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 உறுப்பினர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. பதிவை புதுப்பிக்காத உறுப்பினர்களுக்கும் கரோனா நிவாரண தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியாக பதிவை புதுப்பித்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும், பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.