இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. ஆகையால் நோய் பரவலை தடுக்கும் வகையில் மேற்படி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்களுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று குறைந்துள்ளதால், மக்கள் மத்தியில் மெத்தனப் போக்கு காணப்படுகிறது.
கரோனா நோய் தொற்று இரண்டாவது அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் அரசின் நோக்கங்களைப் புரிந்து கட்டாயம் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கை கழுவவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மக்கள் கண்டிப்பாக கூட்டம் கூடக் கூடாது என்பதையும், கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என்பதையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை கவனமாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றுதல் அவசியம். இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். எனவே, மேற்கூறியவற்றை பின்பற்றாதவர்கள் மீது பொது சுகாதார சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எவரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதத் தொகை ரூபாய் 200 விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராத தொகை விதிக்க சுகாதாரம், காவல், உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.