மதுரை :மதுரை மாவட்டம்வண்டியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி லெட்சுமி (75). கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லெட்சுமியின் கணவர் சேதுராமன் உயிரிழந்த நிலையில், இவரது சொந்தமான வீட்டை விற்று தனது இரு மகன்களான கேசவன், முருகவேல்ஆகியோருக்குபணத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.
அத்தொகையில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை தனக்கென வங்கியில் சேமித்து வைத்து அதிலிருந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெயரிலிருந்த பணத்தை ஏடிஎம்கார்டு மூலம் அவரது மகன்கள் எடுத்துக் கொண்டதாகவும் தன்னிடமிருந்த பத்து சவரன் நகைகளையும் வாங்கிக் கொண்டதாகவும் மூதாட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உணவளிக்காமல் துன்புறுத்திய மகன்
வயது முதிர்வு, பார்வையில் கோளாறு உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது மூத்த மகன் கேசவன் வீட்டிற்குச் சென்று வசித்துள்ளார். லட்சுமிக்கு முறையாக உணவு கூட வழங்காமல் மகனும் மருமகளும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், வீட்டை விட்டு தன்னை வெளியேற்றிவிட்டதாகவும் மூதாட்டி லெட்சுமி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரைப் பரிசீலித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், லெட்சுமியை முதியோர் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டதுடன், விசாரணை நடத்தி மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் - ஆவடி சிசிடிவி காட்சிகள்