மதுரை, தபால் தந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சோனா தீபன். இவரது கணவர் தனுஷ் தீபன். பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் நாள் கரோனா தொற்றின் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஆட்சியர் அலுவலகம் வந்த சிறுமி
இந்நிலையில் கரோனாவால் தாய், தந்தையர் உயிரிழந்தால் அக்குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்கு மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் விண்ணப்பிக்க சோனா தீபன், தனது ஒன்பது வயது மகள் டீடா தீபனுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். இவரது விண்ணப்பத்தை மாவட்டக் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் இருவரும் சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, டீடா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து, தனது தாயார் சோனாவிடம் ”ஆட்சியர் அலுவலகம் எப்படி இருக்கும்? ஆட்சியரின் பணிகள் எவ்வாறு இருக்கும்?” என கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்துள்ளார்.
சிறுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்சியர்
இதனை அங்கு கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் நலக்குழு அலுவலர் பாண்டியராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றக் கோரி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து இந்தத் தகவல் ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அக்குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது அறைக்கு வருமாறு ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.