இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மதுரை மாநகராட்சிப் பகுதிகள் பரவை பேரூராட்சி பகுதி மதுரை மேற்கு கிழக்கு, திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் மட்டும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் ஜூன் 24 அதிகாலை முதல் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஆறு நாட்களுக்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களின் தகுந்த இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காய்கறி பழங்கள் ஆகியன விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும்.
எனவே இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி பழம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கும் என்பதால் நாளை (23/06/20) அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் ஒரே நேரத்தில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும்.
மேலும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உங்கள் பகுதிகளில் இயங்கும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அணுகவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.