மதுரை:சித்திரை மாதம் பிறந்துவிட்டாலே தூங்கா நகரமான மதுரை மண், தனது வழக்கமான நாள்களைவிட மிக உற்சாகமான வகையில் விழாக்கோலம் பூண்டுவிடும். காரணம், மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றுடன் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் என லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற பெருவிழாவாகும்.
மதுரையை ஆட்சி செய்பவள் மீனாட்சி"கண் சிமிட்டாமல், தூங்காமல் நீரையே சுற்றி வரும் மீனைப்போல, மீனாட்சியும் தூங்காமல் ஊற்சுற்றி மக்களை காப்பாற்றுகிறாள். அதனால் தான் மதுரை தூங்கா நகரமாகியது" என மீனாட்சி தலபுராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தனர். மதுரையின் அரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது. மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் ஏப்.14இல் நிகழ்ந்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் : கோவிந்தா.. கோவிந்தா என்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்: மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. கள்ளழகர் திருக்கோலம் பூண்டு நேற்று முன் தினம் திருமாலிருஞ்சோலையில் இருந்து புறப்பட்ட அழகரை, மதுரை மூன்றுமாவடியில் நேற்று காலை 11மணிக்கு பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கிருந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நள்ளிரவு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தடைந்தார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மலர் மாலையை அணிந்து கொண்ட கள்ளழகர், கருப்பண்ணசாமி கோயிலில் ராஜா அலங்காரம் பூண்டு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். ஏபி மேம்பாலம் ஆழ்வார்புரம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 6 மணி அளவில் அருள்மிகு வீரராகவ பெருமாள் அழகரை எதிர்கொண்டு வரவேற்றார்.
முனிவருக்கு சாபவிமோசனம்: அப்போது கள்ளழகர் மாண்டூகமாக நின்ற முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார். வெண்பட்டு உடுத்தி, பச்சை அங்கி அணிந்து தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்குள் எழுந்தருளிய அழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்து கோவிந்தா கோவிந்தா என கரகோஷம் எழுப்பி தரிசித்தனர். பிறகு வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் நோக்கி அழகர் புறப்பட்டுச் சென்றார்.
கோவிந்தா.. கோவிந்தா என்ற லட்சக்கணக்கான பக்தர்கள் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மதுரையில் 2 ஆண்டுகளுக்குப் பின், கரோனா தளர்வுகள் நீங்கி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மதுரை மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விழாவில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள், மதுரை மக்களின் கோவிந்தா முழக்கத்தைக் கேட்டு, சொக்கிப்போய் அவர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : மாசி வீதிகளை வலம் வரும் மீனாட்சி - சொக்கநாதர்