மதுரை: உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மதுரையின் அரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது. மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் ஏப்.14இல் நிகழ்ந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் ஆகியவற்றுக்காக கடந்த 14ஆம் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் திருமாலிருஞ்சோலையில் இருந்து மதுரை புறப்பட்டார். வழிநெடுகிலும் சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி, மதுரை வந்த கள்ளழகரை தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்வு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், இதனைத்தொடர்ந்து வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் நிகழ்வும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 11 மணியளவில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அனந்தராயர் பல்லக்கில் அராசாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.