மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் அய்யனார் முருகன். இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவரை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு வழங்க வேண்டிய உரிய பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2016 ஆம் ஆண்டு ராஜேஷ் அய்யனார் முருகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அவருக்கு பணி வழங்கி, பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25 விழுக்காடு ஊதியம் வழங்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டிலும் அவருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி , “மனுதாரருக்கு 2021 ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை செய்யாத காலத்திற்கான 25 விழுக்காடு பண பலன்கள் வழங்கப்படவில்லை.