தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தி மார்க்கெட் திறக்க மதுரைக் கிளை அனுமதி மறுப்பு! - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: திருச்சி, காந்தி மார்க்கெட் செயல்பட விதித்த இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Oct 28, 2020, 2:32 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தரக் கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் எனச் சுமார் மூன்றாயிரம் கடைகளுக்கு மேல் செயல்பட்டுவருகின்றன. இங்கு கூடும் மக்கள் கூட்டத்தை குறைக்க மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் 77.6 கோடி ரூபாய் செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

கள்ளிக்குடி வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தற்போது கரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் “காந்தி மார்க்கெட்டால் கரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலைப் பின்பற்ற போதுமான இடவசதி உள்ளது. இதனால் காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை வருவதற்கு முன்பாக காந்தி மார்க்கெட் திறக்க விதிக்கப்பட்டிருக்கும் இடைக்கால தடையை நீக்க கூறிய மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மூடப்பட்ட மொத்த காய்கறி சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் திருச்சி காந்தி மார்க்கெட் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே வியாபாரிகள் நலன் கருதியும் பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் நலன் கருதியும் காந்தி மார்க்கெட் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் புதிய மார்க்கெட் சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் காந்தி மார்க்கெட் செயல்பட விதித்த தடையை நீக்க மறுத்தும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details