மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் 16ஆவது புத்தகத் திருவிழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று (அக்.12) தொடங்கியது. அக்டோபர் 22ஆம் தேதி வரை நடக்கும் புத்தகத் திருவிழாவை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஒரு வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. பல்கலைகழக மாணவராக சேர்ந்த போதும், வெளிநாடு சென்ற போதும் படித்ததை வைத்து அனைவரோடு இணைந்து எவ்வாறு பழக வேண்டும் என்பதை உணர்த்தியது.
மேலும், எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை. பெரிய செல்வந்தராக இருந்து மறைந்தால் கூட நினைவு கூற ஆள் இல்லாத சூழ்நிலையில், திருவள்ளுவர் போன்றவர்கள் நீடித்து வரலாற்றில் யாரும் அழிக்க முடியாத பதிவை உருவாக்குவார்கள்.
இதையும் படிங்க:தீபாவளி நாளில் காசியில் 'கங்கா ஸ்நானம்' செய்யனுமா? - ஐஆர்சிடிசி சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா
யாருடைய எழுத்துக்கள் அப்படி நினைவில் இருக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும். பபாசி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கற்ற முறையில் இதனை நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, புதிய கருத்துகள் மற்றும் புதிய நோக்கங்களை உருவாக்க வேண்டும். எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியவற்றை உருவாக்கும் கருவிகள்.
ஜெய்ப்பூரில் கலாச்சார இலக்கிய திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, 2024ஆம் ஆண்டு மதுரையில் ஒரு இலக்கியத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜனவரி மாதம் அதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து சிறப்பான முறையில் நடத்திட ஏற்பாடு செய்வோம்.
மேலும், ஒரே மொழி ஒரே இனம் என 2,000 ஆண்டுகளைக் கடந்து தொன்மை மாறாமல் வாழ்ந்து வரக்கூடிய மதுரை மண்ணிற்கு சொந்தக்காரர்கள், இது போன்ற வாய்ப்பை பயன்படுத்தி இளைஞர்களும், அவர்தம் பெற்றோர்களும் திரளாக வருகை தந்து புத்தகத்தைத் தேடிப் படியுங்கள். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரலாற்று புகைப்படக் கண்காட்சியையும் பாராட்டுகிறேன். உங்கள் வாழ்வை ஒளிமயமாக்க, கல்வி அறிவை மிகுதிபடுத்திடும் வகையில் இது சமூகத்திற்கு உதவும்” என்று கூறினார்.
மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தசரா திருவிழாவுக்கு தயாராகும் குலசை.. மாறுவேடத்துக்கான ஆடை அணிகலன் தயாரிக்கும் பணி தீவிரம்!