மிகக் கோலாகலமாக நடைபெறும் மதுரை புத்தகத் திருவிழா இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாகவும், தமுக்கம் மைதானம் சீரமைப்பு பணிகளின் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புத்தகத் திருவிழா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தென்மாவட்டங்களில் மதுரை புத்தகத் திருவிழாவை பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும், வாசகர்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகின்றனர். ஆகையால் கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமான முறையில் புத்தகத்திருவிழா மதுரையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி, ஈரோடு கோவையை தொடர்ந்து மதுரைப் புத்தகத் திருவிழாவும் ரத்தாகிறது.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அதுதொடர்பான திருவிழாக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் புத்தகக் கண்காட்சி நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. ஆகையால் இவ்விரண்டு சூழல்களையும் கருதி இந்த ஆண்டு மதுரை புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது" எனக் கூறியுள்ளனர்.
கடந்தாண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பதினான்காவது புத்தகத்திருவிழாவில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய்க்கும் மேலாக புத்தக விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.