தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆண்டுக்கு பின்னர் வந்த ரயில் என்ஜினை வரவேற்ற தேனி மக்கள்! - madhurai news

மதுரை: போடி அகல ரயில் பாதையில் தேனி வரையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

train engine checking
10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து ரயில் இன்ஜினை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்

By

Published : Mar 4, 2021, 10:05 AM IST

மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இயங்கி வந்த மதுரை- போடி ரயில் வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2010ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 90.4 கிமீ தூரமுடைய இந்த ரயில் வழித்தடம், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தன.

இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி திகழ்ந்தது. இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.450 கோடி செலவில் தற்போது முழுமையடைய உள்ளது.

இவற்றில் முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து, கடந்த 2020 ஜனவரி மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வரையிலான 21 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, டிசம்பரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து எஞ்சிய 32 கி.மீ தூரத்தில் பணிகள் துரிதப்படுத்தி 2021 ஏப்ரலில் தேனி வரையிலும், செப்டம்பர் மாதத்துக்குள் போடி வரையிலும் பணிகள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டன. இந்நிலையில் ஆண்டிபட்டி - தேனி வரையிலான 17 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிவுற்று நேற்று (மார்ச்3) ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரையில் காலை 10 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் என்ஜின் 12 மணிக்குள் உசிலம்பட்டிக்கும், ஆண்டிபட்டிக்கு மதியம் 1 மணிக்கு வந்தடைந்தது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு தேனி வந்தடைந்த ரயில் என்ஜினை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ரயில் என்ஜினை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்!

குன்னூர் வைகை ஆற்றுப் பாலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக நிறுத்தம், அரண்மனை புதூர் விலக்கு, பாரஸ்ட் ரோடு, பெரியகுளம் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நின்றிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் ரயில் என்ஜினை கண்டுகளித்தனர். மேலும் 10ஆண்டுகளாக ரயில் சத்தத்தை கேட்காத தேனி மக்கள் இன்று ரயில் நிலையம் வந்தடைந்த என்ஜினை பார்த்து மகிழ்ந்தனர். குழந்தைகள், இளைஞர்கள் என்ஜின் முன்பாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனிடையே தேனி ரயில் நிலையம் வந்தடைந்த ரயில் என்ஜினை பொதுமக்கள், வர்த்தகர்கள் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் தனித்தனியே பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது தேனிக்கு ரயில் சேவை வந்தடைந்ததற்காக பிரதமர் மோடி வாழ்க என பாஜகவினரும், தேனி எம்.பி. ஓ.பி.ஆர் வாழ்க என அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு கோசங்களை எழுப்பினர்.

இந்தச் சோதனை ஓட்டத்தில் என்ஜின் வேகத்தை குறைத்தும், அதிகரித்தும் தண்டவாளங்களின் உறுதித் தன்மை மற்றும் அதிர்வு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன. விரைவில் ரயில் என்ஜினுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை-தேனி வரையில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு ரயில் வந்தடைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், நகரின் 3 முக்கிய இடங்களான பெரியகுளம் சாலை, மதுரை சாலை மற்றும் பாரஸ்ட் ரோடு ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் இல்லாமல் லெவல் கிராசிங் மட்டும் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே ரயில் போக்குவரத்து சேவை தொடங்கும் வேளையில், இந்தப் பகுதிகளில் உண்டாகும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று தேனி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:எங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பமா... இன்னும் 3 நாள்கள் நேரம் தருகிறேன் - கமல்

ABOUT THE AUTHOR

...view details