மதுரை: புளூகிராஃப்ட் பதிப்பகம் 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியிட்டது. அந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை எனவும், பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் கண்டு அம்பேத்கரே பெருமைபட்டிருப்பார் எனவும், குறிப்பாக மோடி, அம்பேத்கர் இருவரும் இந்தியாவிற்காக பல கனவுகளை கண்டவர்கள் என எழுதியுள்ளார்.
மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும், அம்பேத்கரின் லட்சிய பயணமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியைப் பற்றி நூல் இது எனவும் அதில் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, இந்தியாவின் ஆகச்சிறந்த இசைமேதை இளையராஜாவை அவமதிப்பதா? எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து, இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.