மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இது தொடர்பான ஒரு வழக்கில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில், அனைத்து சமூகத்தினரையும் கொண்ட விழா கமிட்டியே ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அவனியாபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. ஜனவரி 15ஆம் தேதி நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வுக்கு முன் நேற்று (ஜன.11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.