மதுரை:திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபூதி கொடுக்கும் மற்றும் தேங்காய் உடைக்கும் இடம் சன்னதிக்கு அருகே மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வீரபாகு மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், “முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கோயிலுக்கு வரும் ஆயிரக்கக்காண பக்தர்களுக்கு தற்போது மகா மண்டபத்தில் பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை தேங்காய் உடைக்கப்பட்டு வருகிறது. சன்னதியில் மயில் தேவர் சிலை முன்புறத்தில் பக்தர்களுக்கு விபூதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. விபூதி கொடுக்கும் இடமும் தேங்காய் உடைக்கும் இடம் பாரம்பரிய முறைப்படி ஏற்கனவே இருந்தபடி சந்நதிக்கு அருகே மாற்றம் செய்யப்பட்ட வேண்டும். ஆனால், விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடத்தை கோயில் இனை ஆணையர் இட மாற்றம் செய்துள்ளார். இதனை ரத்து செய்ய வேண்டும்” என கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.