மதுரை:தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதிச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்களின் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவசரம் அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வதில் பிரச்னையும், வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது.
எனவே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட 26 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.