மதுரை:என்ஐடி பணி நியமனம், பதவி உயர்வில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நேரடியாக பணி நியமனம் செய்யலாம் என மத்திய கல்வித்துறை செயலர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கை, என்ஐடி மற்றும் அறிவியல் கல்வி ஆராய்ச்சி சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு, என்ஐடி ஆசிரியர் சங்க தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், மத்திய அரசின் கல்வி மற்றும் உயர் கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும் 31 என்ஐடிக்கள் (தேசிய தொழில்நுட்ப கழகம்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. இயக்குநர், துணை இயக்குநர், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
என்ஐடிக்களின் செயல்பாடுகள், பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் அனைத்தும் என்ஐடி மற்றும் அறிவியல் கல்வி ஆராய்ச்சி சட்டத்தின் கீழ் உள்ளது. இதன் கீழ் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் என்ஐடியின் கவர்னர்ஸ் குழு கூடி முடிவெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுதான் என்ஐடியின் நிர்வாக நடைமுறை.
இதை சார்ந்தே, என்ஐடியின் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் இருக்கும். ஒரு நிலையில் உள்ள ஆசிரியர், அடுத்தடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற முடியும். இந்த நிலையில், மத்திய கல்வித்துறை சார்பு செயலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பதவி உயர்வு முறையைப் பின்பற்றாமல் அந்தந்த பதவிகளின் தகுதிக்கு ஏற்ப நேரடியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.