தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பு செய்ததா சிவகாசி மாநகராட்சி? ஆட்சியர், ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

Sivakasi Municipality Encroachment: சிவகாசியில் மாநகராட்சி பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்தது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவகாசி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி மாநகராட்சி ஆக்கிரமிப்பு விவகாரம்
சிவகாசி மாநகராட்சி ஆக்கிரமிப்பு விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 12:37 PM IST

மதுரை: சிவகாசி விஎஸ்வி குடியிருப்பைச் சேர்ந்த தாஹா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஎஸ்வி குடியிருப்பு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக மாநகராட்சி கட்டடம் ஒன்று கட்டி உள்ளது.

அந்த கட்டடத்தில் நகரில் பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் ஹோட்டல் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை சேமித்து, மறுசுழற்சி மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம், ஈ, கொசு போன்ற நோய் பரப்பும் உயிரினங்களால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து மாநகராட்சி கட்டடம் கட்டியுள்ளது சட்டவிரோதமானது. இதனை அகற்ற வேண்டும். கழிவுகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கை தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாரிஸ் குமார் ஆஜராகி, மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே, சாலையை ஆக்கிரமித்தது சட்டவிரோதமானது. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் மாநகராட்சி கட்டடம் கட்டி, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறி, இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்தது குறித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவகாசி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் அஷ்டமி சப்பர வீதி உலா - வடம் பிடித்திழுத்த பெண்கள்..!

ABOUT THE AUTHOR

...view details