மதுரை:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் செம்மொழி என 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து மொழிகளிலும் மிகப் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்து வருகின்றனர்.
ஆனால், கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு என 22.94 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. 14 ஆயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு கடந்த மூன்று வருடங்களில் 643.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாதி ஆகியோர் அடங்கிய அமர்வு, “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் உள்ளது. அதேநேரம், போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.