மதுரை: திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து, ராபர்ட் பயஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற பின்பு, கடந்த 2022, நவம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தற்போது திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு இலங்கை சிறப்பு அகதிகள் முகாமில் 2022, நவம்பர் 12 முதல் காவலில் வைத்து உள்ளனர்.
முகாமிலிருந்துருந்து விடுதலை செய்யுமாறு இலங்கை அகதிகள் முகாம் அதிகாரியிடம் கேட்டபோது, தங்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினர். ஆனால், தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு அனுப்புவது போன்றாகும். அங்கு சென்றால் நான் நிச்சயமாக கொல்லப்படுவேன். எனவே, தான் இலங்கை செல்ல விரும்பவில்லை.
தற்போது எனது மகனுக்கு திருமணமாகி, நெதர்லாந்தில் மனைவி மற்றும் மகன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நான் கைது செய்யப்பட்டதில் இருந்து, நான் என் மகனுடன் வாழ்ந்ததில்லை. தற்போது என் மனைவியும் நான் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறாள். தன்னை அனுமதித்தால், நெதர்லாந்தில் என் மகன், மனைவி மற்றும் சகோதரியுடன் தன் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்.
எனவே, திருச்சியில் உள்ள இலங்கை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதால், நெதர்லாந்து செல்வதற்கு தொடர்புடைய அதிகாரிகளின் முன் ஆஜராக முடியவில்லை. எனவே, என்னை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும். சுமார் 1 வருடம் சுதந்திரமாக இருக்க அனுமதித்து, நான் நெதர்லாந்து அல்லது வேறு நாட்டிற்குச் செல்ல தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்கவும், வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.