மதுரை:மதுரையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசு பாண்டி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் செய்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
பின்னர் இவை ஆறு, குளம், கடல் என பல்வேறு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. ஆனால், பல்வேறு வேதியியல் பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை. மேலும், இது போன்ற விநாயகர் சிலைகளால் தண்ணீர் மாசுபடுகிறது. இது போன்று ஆறு, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கரைக்கக் கூடிய விநாயகர் சிலையினால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு உண்டாகிறது.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை. ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எற்கனவே அறிவித்துள்ளது. எனவே, ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் செய்வதை தடை செய்து, களிமண் சிலைகளையே செய்ய அனுமதி அளித்து, அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கங்க பூர்வாலா மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசரானைக்கு வந்தது. அப்போது, “விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு உள்ள நிலையில், எவ்வாறு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது, விநாயகர் சிலையை செய்வதற்கு பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு (ஆகஸ்ட் 31) ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:vinayagar chaturthi : விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் குழப்பம்.. அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை!