மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம், கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில், பல பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் கிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாணயங்கள், ரோமன் உடனான வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் அழகன்குளம் கிராமத்தில் 1980 -1987, 1990 - 1991, 1993 - 1994, 1995 - 1996, 1997 - 1998, 2014 - 2015 மற்றும் 2017 என பல முறை அகழாய்வு நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற அகழாய்வு பொருட்களின் வயதை கண்டுபிடிக்கக் கூடிய கார்பன் முறை மூலம் சோதனை செய்ததில் கி.மு.345, கி.மு.268 மற்றும் கி.மு.232 போன்ற வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரிய வருகிறது. அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்தவன் மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், 1980 - 1987, 1990 - 1991, 1993 - 1994, 1995 - 1996, 1997 - 1998, 2014 - 2015 மற்றும் 2017 ஆகிய காலங்களில் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.