மதுரை: விருதுநகர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மேற்குதொடர்ச்சிமலையில் அடர்ந்த வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதமாதம் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிக கூட்டம் வரும். கோயிலின் முக்கிய திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசையின்போது நடைபெறும்.
குறிப்பாக, ஆடி அமாவாசையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மலை அடிவாரத்தில் இருந்து மலையிலுள்ள கோயிலை அடைய சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அமாவாசை தவிர, பௌர்ணமி நாட்களிலும் கோயிலில் கூட்டம் அலைமோதும். வனப்பகுதியில் கோயில் அமைத்திருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
அதன் அடிப்படையில், மலை பகுதியில் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்குவதை தடை விதித்து, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுவதாக கூறினர். ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க:நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி... ஆட்சியை தக்கவைத்தது பாஜக!
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “அடிப்படையில் மலைப் பகுதியில் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்குவதை தடை விதித்து, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மடத்தில் அசைவ உணவுகளை சமைக்கின்றனர். தனி நபர்கள் லட்சக்கணக்கான பணம் வசூலிக்கின்றனர். விளம்பரம் செய்கின்றனர். இதனால் வனப்பகுதி மாசுப்படுகிறது. எனவே, அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில், 7 கிலோ மீட்டர் அடிவாரத்தில் இருந்து மலையேற வேண்டும். ஒவ்வொரு பக்தரும் குடிநீர் உணவு கொண்டு செல்வது இயலாத காரியம். எனவே பக்தர்களின், நலன் கருதி ஆடி அமாவாசை நாட்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து, “பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கக் கூடாது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இந்து மதத்தின் ஒரு அங்கம். புனிதமான காரியமும் கூட. அப்படி இருக்கையில், ஏன் அன்னதான மடங்களை செயல்பட அனுமதி மறுக்கின்றனர்? பக்தர்களின் பங்களிப்போடு கோயில் திருவிழா நடைபெற வேண்டும்.
எனவே, ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் மலைக்கு செல்லும் வழியில் ஆகஸ்ட்டு 16ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:முட்புதருக்குள் கிடந்த குழந்தை: மீட்க உதவிய விஏஓ-வுக்கு பாராட்டு!