சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள்: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு - சாலை விரிவாக்க பணிக்கு வெட்டப்பட்ட மரங்கள்
மதுரை: சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக, மரங்களை வெட்ட வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
![சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள்: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு மதுரை கிளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:27:57:1600930677-tn-mdu-hc-01-road-expansion-tree-script-7208110-24092020121824-2409f-1600930104-13.jpg)
விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் "மாநிலத் தலைநகரங்களையும் முக்கிய நகரங்களையும் இணைக்கும் விதமாக நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், பராமரிப்பதற்காகவும் போதிய நிதி இல்லாத நிலையில் தனியார், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்காண பணிகள் நடைபெற்றன. அதனடிப்படையில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கத்தின்போது 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டியுள்ளனர். இதற்குப் பதிலாக 10 லட்சம் மரங்களை நட வேண்டும்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை வெட்டிய மரங்களுக்காக புதிய மரக்கன்றுகளை நடத்தவறிவிட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய நெடுச்சாலைத்துறை அமைச்சர், பசுமை நெடுச்சாலை திட்டத்தின் கீழ், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுவதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்படவில்லை.
ஆகவே, தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மரக்கன்றுகளை நடவும், அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் கூறுகையில், 'வனத்துறையிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். நாட்டு மரங்களை வளர்க்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை 3 மாதங்களுக்கு கழித்து தான் வருகிறது. இவ்வாறு சென்றால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகும். நாட்டு மரங்கள் என்னென்ன மரங்கள் நடப்பட்டுள்ளன' என கேள்வி எழுப்பினர்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவிட்டபடி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில், சாலை விரிவாக்கத்திற்காக, மரங்களை வெட்ட வேண்டாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தொடர்ந்து சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் எவ்வளவு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.