மதுரை: மதுரையில் புதிய ஆட்டோ அல்லது சி.என்.ஜி. ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கருப்பையா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மதுரை மாநகர் பகுதியில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், டீசல் ஆட்டோவில் இருந்து எல்பிஜி ஆட்டோக்களாக மாற்றி ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என 2015-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போது சி.என்.ஜி. ஆட்டோக்களுக்கு அதிகமாக அனுமதி அளித்து, வியாபார நோக்கத்துடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.