தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பட்டியலின மாணவி என்பதால் உதவித்தொகை வழங்க பல்கலைக்கழகம் தாமதிக்கிறதா?" - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி! - மதுரை மாவட்ட செய்தி

Madurai Bench news today: பட்டியல் சமூக மாணவி என்பதால் உதவித்தொகை வழங்க பல்கலைக்கழகம் தாமதிக்கிறதா என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:30 PM IST

மதுரை:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்பு (2013 முதல் 2016) பயில்வதற்காக விண்ணப்பித்து தனது படிப்பை தொடர்ந்து வந்தேன். இந்நிலையில் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இடைநிற்றல் செய்தேன்.

பின்னர் மீண்டும் என்னுடைய P.hd வழிகாட்டி ஆசிரியரை மாற்றி, மீண்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடர பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தேன். இதனைத் தொடர்ந்து இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்பிற்கான உதவித்தொகை வழங்க முறைப்படி விண்ணப்பித்தேன். ஆனால், பல்கலைக்கழகம் எனக்கு உதவித்தொகை வழங்கவில்லை.

எனவே, தனது ஆராய்ச்சி படிப்புக்கு உரிய உதவித்தொகை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, 2017ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மதுரை காமராசர் பல்கலைகழகம் சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிக்கு 4 வாரத்தில் உதவித் தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை மாணவிக்கு இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை காமராசர் பல்கலைகழக பதிவாளர் நேரில் ஆஜரானார். அப்போது பல்கலைக்கழகம் தரப்பில், ”பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இருப்பு இல்லாததால் உதவித்தொகை வழங்கவில்லை. மாணவிக்கு வழங்க வேண்டிய உதவிதொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி பட்டு தேவானந்த், “பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளில் பட்டியலின மாணவ, மாணவிகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சேருகின்றனர். மாணவி தனக்கு உரிய நீதி கிடைக்காத பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவ்வாறு இருந்தும் இதுபோன்ற செயல்களால் மாணவர்கள் மீது வன்கொடுமை நடக்கிறது.

பட்டியல் சமூக ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதும் வன்கொடுமைதான். எனவே, ஏன் உங்கள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கூடாது. இதுபோன்ற உதவித்தொகைதான் சில மாணவர்கள் கல்வி கற்க பயன்படுகிறது. பல்கலைக்கழகம் தனது சொந்த பணத்தை கொடுக்கவில்லை.

பட்டியலின மாணவி என்பதால் உதவித்தொகை வழங்க பல்கலைக்கழகம் தாமதிக்கிறதா? வரும் வெள்ளிக்கிழமைக்குள் சம்மந்தப்பட்ட மாணவிக்கு உதவித்தொகையை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பட்டியலின நீதிபதிகள் மிக்குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்” என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: பணப் பலன்களை வழங்குவதில் சிக்கல்... ஓய்வு பெற்ற DEOக்கு சிறை.. நீதிபதியின் உத்தரவு நிறுத்திவைப்பு! என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details